பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல – மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையையும் சர்வதேசத்தையும் அச்சுறுத்திவரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவது பொறுத்தமானதல்ல எனச் சுட்டிக்காட்டி மலையக மக்கள் முன்னணி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கொரோனாவிலுருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமையாக இருக்குமாறும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் பொதுக் கூட்டங்களில் மக்கள் ஒன்று கூடியே கலந்துகொள்வர். ஒன்றுகூடியே மக்கள் பிரதிநிதிகளையும் தெரிவு செய்வர். தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல.

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு உரிய காலத்திலேயே நடத்தப்பட வேண்டும். ஒரு பகுதியினரின் நன்மை கருதி, தேர்தலை நடத்த வேண்டிய காலத்துக்கு முன்பே நடத்த முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இவ்வாறான சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மக்கள் சுதந்திரமாக தமது அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பதுடன், தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது.

எனவே, இவற்றைக் கருத்தில்கொண்டு தேர்தலை பிற்போடுவதே சிறந்த விடயமாகும் என்றும் தேர்தல் ஆணையாளருக்குக் அனுப்பியுள்ள கடித்தில் வலியுறுத்தியுள்ளேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.