நிவாரணப் பணிகளில் அரசியல் இல்லையாம் – மஹிந்த அணி கூறுகின்றது

“அரசியல் இலாப நோக்கோடு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம். எனினும், நிவாரணப் பணிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டத்தன் பின்னர் சில மாவட்டங்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு வேளையில் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்யவும் ஏனைய தொழிலை இழந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை வரலாற்றில் இதுவரையில்  எந்தவொரு அரசும் இவ்வாறு செய்திருக்கவில்லை.

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் இருப்பதாக இலங்கை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அறிக்கை தெரிவிக்கின்றது.  இதில் 52 இலட்சம் குடும்பத்துக்கு அரசால் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் 25 இலட்சத்து 73 ஆயிரத்து 664 பேருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் கொடுப்பனவு பெறுவோர் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 387 பேருக்கும், ஏனைய விதத்தில் அடையாளம் காணப்பட்ட 19 இலட்சம் பேருக்கும் மேலதிகமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 52 இலட்சத்து 64 ஆயிரத்து 861 பேர்  நிவாரணம் பெறுவதற்குத்   தகுதியானவர்களாகும்.

அத்துடன், அரச உத்தியோகஸ்த்தர்கள் 13 இலட்சத்து 81 ஆயிரத்து 224 பேர் உள்ளடங்குவதுடன் அரச ஓய்வூதியம் பெறுவோர் 6 இலட்சத்து 65 ஆயிரம் பேர் அடங்கலாக மொத்தமாக 72 இலட்சத்து 91 ஆயிரத்து  64 பேர் நிவாரணம் பெறுகின்றனர்.

அரசியல் இலாப நோக்கோடு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகத்துக்குத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றேன். உதாரணமாக கண்டி மாவட்டத்தில் தெல்தொட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மொத்த குடும்ப எண்ணிக்கை 19 ஆயிரத்து 226 ஆகும்.

இதில் சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் தவிர்ந்து 19.5 சதவீதமானோர் நிவாரணம் பெற்றுக்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அரசியல் நோக்கோடு நிவாரணம் வழங்குவதாகக் கூறமுடியும்?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.