31 ஆயிரத்து 690 பேர் 29 நாட்களில் கைது! – 8 ஆயிரத்து 151 வாகனங்கள் பறிமுதல்

நாடளாவிய ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு அனுமதிப் பத்திரம் இன்றி நடமாடியமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம், அத்தியாவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பிலே அதிகளவானோர்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் மாத்திரம் ஆயிரத்து 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 38 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கடந்த 29 நாட்களுக்குள் மாத்திரம் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார், ஓட்டோக்கள் மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட  8 ஆயிரத்து 151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைப் பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அவை கொரோனா வைரஸ்  தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் உரிய தரப்பினருக்குக் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வாகனங்கள் தொற்று நீக்கம் தொடர்பான போக்குவரத்து செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.