நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோட்டாவிடம் சஜித் கோரிக்கை


உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக எமது நாடும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அது குறித்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்  உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை உரிய காலத்துக்குள் நடத்தமுடியும் என்று எதிர்பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை தொடர்வதால் காலம் கடத்தாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டி அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முடிவு எடுப்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தருமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டும் பட்சத்தில் அங்கு ஏற்படக்கூடிய செலவினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய கொடுப்பனவுகள், சம்பளம், உணவு மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் தியாகம் செய்யவும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னமும் சரியான ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இருப்பதாக நாம் அறிந்துள்ளோம். இவ்வாறான சூழ்நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடக்கும் காலம் மிக அண்மித்து விட்டது. அதன் பின்னர் எந்த வகையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்தும் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

சில வேளை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்துப்படி ஜூலை மாதம் வரை தேர்தலை நடத்த முடியுமா? என்ற அச்சம் காணப்படுவதாக அறிந்துள்ளோம்.

இந்தநிலையில் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகும் ஒரு நிலைமை உருவாவது தவிர்க்க முடியாததாகும். இதனை ஆரோக்கியமானதாக எம்மால் கருத முடியாது.

எனவேதான் இம்மாத இறுதிக்குள் அல்லது மே மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த நெருக்கடி நிலைகள் தொடர்பாக விவாதித்து அல்லது கலந்துரையாடி ஆரோக்கியமான முடிவை எடுப்பதற்கு ஒரு வாய்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இதன்மூலம் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது வேறு கட்சிகளோ எந்தவிதமான அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் கிடையாது.

இன்றைய நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனநாயக அரசியல் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதே இப்போதைய அவசியமானதாகும்.

இதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அடிப்படையில் தங்களுக்கு கடப்பாடு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி அதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறு தங்களிடம் அனைத்துக் கட்சிகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.