அரசின் கொரோனா நிவாரணத்தை அரசியல் ஆதாயமாக்கும் அங்கஜன்! அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் தூங்குகிறதா தேர்தல் ஆணைக்குழு?

ஆளும் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரசின் நிவாரணங்களை தன் அரசிய ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று அரச அதிகாரிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு, தனது அமைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவரது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்.

தேர்தல் சட்டம் நடைமுறையில் உள்ள காலத்தில் அவர் பகிரங்கமாக இத்தகைய பரப்புரைகளை முன்னெடுக்கும் நிலையிலும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரோ அல்லது உதவித் தெரிவத்தாட்சி அலுவலரோ இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக ஒரு தொகுதிப் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் இவர்கள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கலில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிவித்து கிராம அலுவலர் சங்கம் விலகியிருந்து, பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னரே மீண்டும் அந்தப்பணியில் இணைந்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அங்கஜன் இராமநாதன், தனது முகநூலில்,

“கொரோனா நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லையா?, நீங்கள் யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சியில் வசிப்பவரா?, கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளீர்களா?, நீங்கள் அரச உத்தியோகத்தர், ஓய்வூதியம் பெறுநர், சமுர்த்தி பயனாளி அல்லாத ஒருவரா?, கொரோனா அரச நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லையா ?, உடனடியாக எங்கள் இணைப்பாளர்களை அழையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு  யாழ்.மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண விநியோகங்களையும், உதவி வழங்கல்களையும்,  கொடுப்பனவுகளையும் தான் செய்தது போல் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அரச நிவாரணங்கள் தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மேற்கொள்ளும் இத்தகைய பரப்புரைகள் அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல்கள். எனினும், இவை தொடர்பில் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரோ அல்லது உதவித் தெரிவத்தாட்சி அலுவலரோ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா எனப் பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

“மேற்படி விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை” என்று யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.