விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் தாமதமேயன்றி தடையல்ல …. அன்னைபூபதி நிகழ்வில் சிறீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி  தடைஅல்ல  எனத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி  அவர்களின் 32ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நினைவுரையாற்றுகையில்  1988 களில் சிங்கள ஆட்சியாளர்களினதும் அதனோடு இணைந்த உதவிப்படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் எங்கள் தேசம் சிக்கித்தவித்தது. மரணஓலமே  எம் மண்ணை நிறைத்திருந்தது. மரணங்கள் மலிந்த பூமியாக நாம் வதைபட்டபோது அன்னைபூபதி அகிம்சைக்களத்திலே தன்னை அர்ப்பணித்தார். தர்மம் மிகுந்த வாழ்வை தமிழர்கள் பெற வேண்டும் என்பதற்காக தன் உயிர் தேசத்தின் தாயாக அவர் பரிணமித்தார்.
கடந்த 32 ஆண்டுகளாக அந்த தாய் தாங்கிய கனவுகளோடு பயணிக்கிறோம். போராட்ட வழிமுறைகள் மாறினாலும் இலட்சியம் மாறாது பயணிக்கின்ற இவ்வேளையிலே மரணங்கள் மலிந்துபோயுள்ளது. வல்லரசுகள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. ஒவ்வொரு அரசுகளும் தேசிய இனங்களும் தர்மத்தை நேசிக்கின்ற தேடுகின்ற காலம் உருவாக்கியிருக்கிறது 89 ஆம் ஆண்டுகளின் பின்னர்  23 நாடுகள் சுதந்திரம் அடைந்திருக்கின்றன.
உலகம் இன்று  இருளில்ச் சூழ்ந்திருக்கின்றது. புதிய சிந்தனைகளை புதிய பாதைகளை புதிய பொருளாதார தேர்வுகளை புதிய உலக ஒழுங்கினைப் பற்றி சிந்திப்பதற்க கொரோனா வைரஸ் அடிகோலியிருக்கிறது. ஆகவே தமிழ்த்தேசிய இனமாகிய நாங்கள் போரை சுனாமியை பொருளாதாரத்தடையை பன்னாட்டு அரசுகளின அழுத்தங்களை எதிர்கொண்ட வண்ணம் சுயநிர்ணய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது கொரோனா வந்திருக்கிறது .
இதனை எதிர்கொள்வோம் வெற்றி கொள்வோம் என்கின்ற திடசங்கற்பத்தோடு அன்னை பூபதி காட்டிய அறப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப்பாதையில் கொரோனா வைரஸின் தாக்கம் தாமதமே அன்றி தடைஅல்ல என்பதை ஒன்று பட்ட சக்தியாக நின்று வெற்றி கொள்வதே அன்னைபூபதியின் இலட்சியதாகத்தை வென்றெடுப்பதற்கான திடசங்கற்பம் ஆகும் என்றார்.
ஈகைச்சுடரினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றிவைத்து அன்னைபூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினையும் அணிவித்தார்.
இந்நிகழ்வில்  கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் உபதவிசாளர் தவபாலன் கட்சியின் கிளிநொச்சி மாவட்டகிளையின் செயலாளர் விஜயன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள்  கலந்து கொணடனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.