இலங்கையில் இன்று மட்டும் 17 பேருக்குக் ‘கொரோனா’ * மொத்த தொற்று எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு * இதுவரை 96 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்றிரவு 9.40 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, வாழைத்தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 17 பேருக்கு வைரஸ் தொற்றுள்ளை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து வாழைத்தோட்டத்தில் குறித்த பெண் உள்ளிட்ட 27 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணாலே அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 122 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை