ஊரடங்கு தளர்வில் மக்கள் சபையின் ஒழுங்குகளை பின்பற்றவேண்டும் – தவிசாளர் நிரோஷ்…

யாழ். மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில்   உள்ளூர் நகர நடைமுறைகளில் பிரதேச சபை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு மக்களை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேட்டுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இந்துஜன் வைத்திலிங்கத்துடன் தொலைபேசி வாயிலாகவும் அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பிரதேச சபையில் சந்தித்து நாளைய தின ஒழுங்கமைப்புக்கள் பற்றி ஆராய்ந்திருந்தோம்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய கருமங்களின் அடிப்படையிலான செயற்பாடுகளுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. தொற்று அபாயம் முழுமையாக நீங்கிவிடவில்லை என்ற அடிப்படையில்  வலிகாமம் கிழக்கில் அலுவலகங்களுக்கு அல்லது பொது இடங்களுக்கு வருவோர் அவ் அவ் வாயில்களில் கைகளைக் கழுவி விட்டு உள்நுழையவேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். பிரதேச சபையுடன் தொடர்புபட்ட விடயங்களின் அடிப்படையில் அலுவலக பொதுத் தொலைபேசி பரிவர்த்தனையின் பின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அலுவலகத்திற்கு வருவது சிறந்தது.
மேலும் மக்கள் ஒன்றுகூடக்கூடிய சந்தை நடைமுறைகள் இயங்காது. சந்தையில் உற்பத்திகளை விற்றாக வேண்டும் என்ற நிலையில் இருப்போர் அச்சுவேலி – வல்லை வீதியின் இருமருங்கிலும் அங்கு கடைமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்கள் ஒழுங்கு படுத்தலுக்கு ஏற்ப உரிய இடைவெளிகளை பேணி வியாபார முயற்சியில் ஈடுபடலாம்.
மக்களை வியாபார நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் அல்லது நடமாடும் வணிக முயற்சிகளில் ஒன்றுகூட்டி செயற்பட முடியாது. மக்களிடத்தில் சுகாதார இடைவெளிகளை பேண வேண்டிய பொறுப்பு வியாபார முயற்சியாளர்களுக்கு உள்ளது. அதனைமீறிச் செயற்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை வளாகங்களுக்குள் உள்ள பலசரக்குக் கடைகளுக்கு மாத்திரமே சந்தை வளவினுள் செயற்பட அனுமதியுள்ளது.
சந்தைகள் வளாகங்களில் இயங்காதபோதும் வலிகாமம் கிழக்கின்; அச்சுவேலி, உரும்பிராய், கோப்பாய் சந்தைகளை அண்மித்த, ஏனைய பகுதிகளில் சமூக இடைவெளிகள் தேவை என்ற அவசியம் உணரப்பட்டால் ஒலிபெருக்கி அறிவிப்புக்களுக்கு மக்கள் இசைந்து செயற்படவேண்டும்.
சிகை அலங்கார நிலையங்களில் ஒருவர் மாத்திரமே கடைக்குள் அனுமதிக்கப்படமுடியும். மிகவும் சுகாதாரத்திற்குப் பொருத்தமான அணுகுமுறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படவேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே எமது சபை திரவ மருந்து விசுறுவதன் ஊடான சுத்தப்படுத்தலை கிரமமாக முன்னெடுத்து வருகின்றது. ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையிலும் அது தொடர்ச்சியாக தேவைக்கு ஏற்ப விஸ்தரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டவாறு நடமாடும் வியாபார முயற்சிகளின் வாயிலாக மீன் மரக்கறி மற்றும் பொருடகளை கொள்வனவு செய்வது பொருத்தமானது. அத்துடன் தவிர்க்கமுடியாத பயணங்கள் தவிர்த்து வேறு எதனையும் மேற்கொள்ளவேண்டாம் எனவும் நீண்ட நாட்களாக ஊரடங்கு நிலவியமையால்வேடிக்கை பார்ப்பதற்கும் சுற்றித்திரிவதற்கும் யாரும் முயற்சிக்கக் கூடாது
மேற்படி விடயங்கள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இந்துஜன் வைத்திலிங்கத்துடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதுடன் அச்சுவேலி உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பிரதேச சபையில் சந்தித்து ஆராய்ந்திருந்தோம். நகர்களுக்குள் மக்கள் கூடாதவாறு அவ்வப்போது தேவைப்பட்டால் வீதிகள் மறிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.