ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது – ஆட்கொணர்வு மனு தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரின் தந்தை மற்றும் சகோதரரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவரை கைது செய்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறும், தடுப்புக்காவல் உத்தரவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்திப்பதற்கு அவரின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் – அதன் பணிப்பாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ரிசாட்டின் சகோதரர் உள்ளிட்ட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்