ஊரடங்கு தளர்வு வேளை சுகாதார அறிவுறுத்தல்களை மீறியுள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அம்பாறை மாவட்டம்

பாறுக் ஷிஹான்
 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்  சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்கைளை மீறி  இன்று அம்பாறை  சில பிரதேசங்களில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது.

குறிப்பாக  அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் திங்கட்கிழமை(20) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் பொருட்கொள்வனவு மற்றும்  வீதியில் சேவையில் ஈடுபட்ட பஸ்களில் பயணித்த வேளையிலும் உரிய நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை.அவ்வாறு இருந்த போதிலும் பாதுகாப்பு படையினர் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் சம்பவ இடங்களுக்கு வருகை தந்து அறிவுறுத்தல்களை விடுத்த வண்ணம் உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஊரடங்கு சட்டம்  இன்று (20) தளர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள கடைகள் தனியார்  அரச வங்கிகள்  பிரதேச செயலகங்கள் விவசாய திணைக்களங்கள் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.எனினும் அங்கு தேவைகளுக்காக வந்த மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது சென்றதை காண முடிந்தது.

மிக நீண்ட நாள்களுக்கு பின்னர் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதால்  மதுபான விற்பனை நிலையங்களில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்றதுடன்  அவர்களுக்கான இடைவெளியை பேணுவதில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.அதேபோன்று  சிகை அலங்கார நிலையங்களிலும் முடிவெட்டுவதற்காக பொதுமக்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் காணப்பட்டனர். வீதியின் பிரதான இடங்களில் வீதிப்போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டதுடன்  இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அம்பாறை  மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஊரடங்கு இன்று காலை முதல் இரவு 8.00மணி வரையில் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.