ஈஸ்டர் தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த வருடம் 2019.04.21 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளை நினைவுபடுத்தி மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இன்று (21) யாழ் முஸ்லிம் இளைஞர் கழக அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மரநடுகை முன்னெடுக்கப்பட்டது. இவ் ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களின் உறவுகளுக்கு அனுதாபங்களையும் குறித்த இளைஞர் அமைப்பினர் தெரிவித்து நிற்கின்றனர். மரநடுகையின் பின்னர் கருத்து தெரிவித்த இளைஞர் அமைப்பின் செயலாளர் என்.மில்ஹான் பாரிஸ் அவர்கள்
கடந்த வருடம் இடம்பெற்ற இக் குண்டுத் தாக்குதலானது மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலானது பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையிலே இனங்களுக்கிடையில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதுடன், நல்லிணக்க வாழ்வை சிதைத்திருக்கின்றது. ஒரு சில சுயநல காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
எமது மக்கள் பல்வேறு துன்பங்களை இறுதி யுத்த காலப்பகுதியில் அனுபவித்து மிகுந்த துன்பகரமான சூழ்நிலையில் தமது அன்றாட வாழ்வை முன்னகரத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் தொடர்ந்தும் எம் மக்களை துன்பத்திற்குள் கொண்டு போவதை நாம் அனுமதிக்க முடியாது. பல்வேறு வலிகளை அனுபவித்த எமது மக்களை நிம்மதியாகவும், ஐக்கியமாகவும், அமைதியாகவும் வாழவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கை.
ஈஸ்டர் தாக்குதலில் பலியான எம் உறவுகளுக்கு எமது அஞ்சலியை செலுத்துவதுடன். இலங்கையில் இனி ஒருபோதும் இவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படக்கூடாது என்றும் எல்லாம் வல்ல இறைவனைப் பிறார்த்திக்கின்றோம்’ என்று குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத்தின் தலைவர் என்.எம். அப்துல்லாஹ், செயலாளர் என். மில்ஹான் பாரிஸ், நிர்வாக உறுப்பினர்களான ஏ.எம். சாக்கிர், என்.எம். இஜாஸ், ஏஸ். ஆரவிந்தன், ஐ. ஐசான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.