எனது வளர்ச்சியை கண்டு பொறுக்கமுடியாதவர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் –சாணக்கியன்

கடந்த சில காலங்களாக நான் மேற்கொண்டுவரும் சமூக பணியை பார்த்து அரசியல் ரீதியாக எனது வளர்ச்சியை பார்த்தும் மக்கள் மத்தியில் எனக்குள்ள வளர்ச்சியை பார்த்தும் பொறுக்கமுடியாதவர்கள் அந்த செல்வாக்கினை இல்லாமல்செய்யவேண்டும் என்பதற்காக போலி செய்திகளை வெளியிட்டுவருவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில போலி இணையத்தளங்கள் என்னைப்பற்றியும் பிரதேசசபை உறுப்பினர் வினோராஜ் தொடர்பிலும் வெளிவந்துள்ளதை அறிந்தோம்.கொரனா அச்சுறுத்தலை தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலம் தொடக்கம் சுமார் ஒரு மாதகாலமாக நிவாரணம் வழங்கும் பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.

இரு தினங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடு காரணமாக பொலநிறுவையில் உள்ள பிரபல அரிசி ஆலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு சென்றிருந்தோம்.அதை தொடர்ந்து கண்டி மாவட்டத்திற்கு சென்று என்னுடைய வங்கிக் கணக்கு சம்பந்தமான சில விடயங்களை முடித்துவிட்டு நேற்று மாலை மட்டக்களப்பிற்கு வந்தேன். கடந்த ஒரு மாதகாலமாக இந்த மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் நாங்கள் நிவாரணப் பணிகளை முன்னெடுத்தபோது அனைத்து சோதனைச் சாவடிகளிலும் எங்களை நிறுத்தி எங்களை கேள்வி கேட்டனர்.

அதற்கெல்லாம் பதில்கூறியபடியே நாங்கள் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவந்தோம். அத்தியாவசிய தேவை என்பதற்கான பாஸ்கூட எங்களுக்கு தரப்பட்டது. ஐம்பது,அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட நிவாரணத்தை ஒன்பதாயிரம் குடும்பங்களுக்கு நாங்கள் கொடுத்திருக்கின்றோம் என்றால் எத்தனை வாகனங்களை நாங்கள் பயன்படுத்தியிருப்போம், எத்தனை இடங்களுக்கு நாங்கள் சென்றிருப்போம்,எத்தனை பொலிஸ் அனுமதிகளை நாங்கள் பெற்றிருப்போம். எங்கள் பாதுகாப்பையும் நேர்தையும் அர்ப்பணித்து இந்த நிவாரணப்பணிகளை, மக்கள் சேவையை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

இந்த செய்தியானது முற்றுமுழுதாக என்னை தாக்குவதற்கான முயற்சியாகவே நான் பார்க்கின்றேன். கடந்த சில காலங்களாக நான் மேற்கொண்டுவரும் சமூக பணியை பார்த்து அரசியல் ரீதியாக எனது வளர்ச்சியை பார்த்தும் மக்கள் மத்தியில் எனக்குள்ள வளர்ச்சியை பார்த்தும் பொறுக்கமுடியாதவர்கள் அந்த செல்வாக்கினை இல்லாமல்செய்யவேண்டும் என்பதற்காக போலி செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.

நாங்கள் மதுபானம் கடத்தியதாக ஏதாவது பதிவுகள் இருந்தால் இவ்வாறானவர்கள் பகிரங்கப்படுத்தமுடியும்.நான் பொலநறுவைக்கு அரிசி கொள்வனவுக்காக சென்று அங்கிருந்து கண்டிசென்று மீண்டும் நேற்றுதான் மட்டக்களப்புக்கு வந்தேன்.அப்பட்டமான பொய்யை எழுதியுள்ளனர்.

இவ்வாறான வங்குரோத்து அரசியல்செய்பவர்கள் அவற்றினை கைவிடவேண்டும்.உங்களுக்கு எந்தவித சமூக நோக்கும் இல்லாவிட்டாலும் சமூகத்திற்காக சேவையாற்றும் என்னைப்போன்ற இளைஞர்களை வரவேற்காவிட்டாலும் சேவையாற்றும் இளைஞர்களை தளர்வடையசெய்யவேண்டாம் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.