இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுங்கள் – சிறிதரன் கோரிக்கை

கிராம அலுவலர்களுக்கு இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “கிராம அலுவலர்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கல் தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பேரிடர் காரணமாக ஒட்டுமொத்த நாடும், அதன் அரச, அரச சார்பற்ற கட்டமைப்புக்களும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் மக்கள் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் கிராம அலுவலர்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் மிகக்கூடியளவு சேவைப்பரப்பையும், அதிகூடியளவான குடும்பங்களையும் கொண்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு முதியோர் கொடுப்பனவு, வறியவர்களுக்கான கொடுப்பனவு, சமூர்த்தி மாதாந்த கொடுப்பனவு என்பவற்றோடு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டு வரும் உலருணவு நிவாரணப் பொதிகளையும் மிகநீண்டதூரம் தமது சொந்த வாகனங்களில் பயணம் செய்து வீடு வீடாக கொண்டு சென்று விநியோகிக்கும் பணியை கிராம அலுவலர்களே முன்னெடுத்து வருகின்றார்கள்.

உயிராபத்து நிறைந்ததோர் இடர்காலச் சூழலில் கடந்த ஒருமாத காலமாக ஓய்வின்றி தமது குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் துறந்து தன்னலமற்ற மக்கள் பணியாற்றிவரும் இவர்களுக்கு இன்றளவும் அரசாங்கத்தினால் மேலதிக நேரக் கொடுப்பனவு, எரிபொருள்க் கொடுப்பனவு போன்ற விசேட கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் மாவட்டச்செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் எவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடியவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக பல நெருக்கீடுகளை எதிர்கொண்டுள்ள இவர்கள் தமது கடமையை முழுமனதோடு செய்ய முடியாது பல்வேறுபட்ட மன அழுத்தங்களுடன் தொடர்ச்சியாக கடமையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

எனவே ஒவ்வொரு கிராம அலுவலர்களும் இவ் இடர்காலத்தில் ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு மிக்க சேவையினை கருத்திற்கொண்டு அவர்களது சேவைப்பரப்பின் அடிப்படையில் விசேட கொடுப்பனவொன்றை பெற்றுக்கொடுக்க ஆவனசெய்ய வேண்டுமென தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.