பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை!

வவுனியா நகரில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் மாவட்ட அழகு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன் சில அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளோம்.

குறிப்பாக உணவகங்கள் சுகாதார விடயங்களை கையாள்வது மிகவும் முக்கியமானது. உணவருந்த வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணும் நிலை தொடர்பாக அனைத்து உணவகங்களும் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன் நகருக்குட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் எச்சில் துப்புபவர்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்துகொண்டு யன்னல் வழியாக எச்சில் துப்புபவர்கள் மீது கவனம் செலுத்தவுள்ளோம்.

இவ்வாறான செயற்பாடுகளாலும் கொரோனோ வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.

இவ்விடயங்கள் தொடர்பாக நாளைய தினம் இடம்பெறவுள்ள நகரசபையின் மாதாந்த அமர்வில் ஏனைய உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.