புலம்பெயர் உறவுகளின் இழப்பு எங்கள் தேசத்திற்கே இழப்பு! சிறீதரன் கவலை
கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்டுள்ள ஈழத் தமிழ் உறவுகளின் மரணங்கள் எமது தேசத்திற்கு பேரிழப்பு என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்
புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
‘தாய் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது சொந்தங்களுக்காகவும் அல்லும் பகலும் பாடுபட்ட எமது உறவுகளின் இழப்புக்கள் இங்கே உள்ள பல வீடுகளை கண்ணீரில் நனைத்துள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் மாத்திரமின்றி ஊடகவியலாளர் மருத்துவர் என்று பல புலமையாளர்களையும் இழந்திருக்கின்றோம் இந்த இழப்பு எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அகதிகளாக அந்த மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை. கூடு திரும்ப முடியாத பறவைகளாய் உலகம் எங்கும் அலையும் எமது மக்கள் தாய் மண்ணுக்காக பனியிலும் குளிரிலும் உழைக்கின்றனர்.
அத்துடன் எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கும் பெரும் பங்களிப்பை புலம்பெயர்ந்த உறவுகள் வழங்கியிருக்கிறார்கள். அது மாத்திரமின்றி இன்றைக்கு போரால் சிதைந்துபோன வடக்கு கிழக்கை மீட்டெடுப்பதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு அளப்பெரியது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து வரும் மரணச் செய்திகள் எம்மை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள எமது உறவுகள் இந்த நெருக்கடிக் காலத்திலும் தமது உடல் நலன்களைப் பாராமல் உழைப்பதும் இந்த நோயால் பாதிக்கப்பட காரணம் என்று அங்குள்ள சில மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதற்கு ஏற்ப இந்த நெருக்கடிக் காலத்தில் உங்களை பாதுகாத்து உங்கள் நலனில் அக்கறை கொள்ளுமாறு எங்கள் அன்புமிகுந்த உறவுகளை வேண்டி நிற்கிறோம். ஏற்கனவே இன அழிப்பு போரால் லட்சம் உறவுகளை இழந்த நாம் இனியும் அநியாயமாக ஒரு உயிரையும் இழக்கக்கூடாது.
அத்துடன் கொரோனா என்ற கொடிய நோயினால் நிலத்திலும் புலத்திலும் காவு கொள்ளப்பட்ட எமது உறவுகளுக்கு எமது அஞ்சலியை தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கிறேன்…’
அதேவேளை இத்தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்ற எல்லா நாடுகளும் தாக்கத்தில் இருந்து மீட்சி பெறவும் நோயினை வெற்றி கொள்வதற்கான திடகாத்திரத்தினை அந் நாடுகளின் தலைவர்கள் பெற்றுக் கொள்ளவும் தொற்றுக்கு உள்ளாகியோர் குணமடைந்து சுபீட்சமும் சௌக்கியமும் மிக்க வகையில் உலக நாடுகள் அனைத்தும் மீண்டெழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை