323ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 13 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டம், பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பேருவளையில் ஏற்கனவே 30 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 11 பேர் பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று 12 ஆவது நபராக அடையாளம் காணப்பட்டவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

இன்று 13 நபராக அடையாளம் காணப்பட்டவர் ஜா – எல, சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எனவும், அவர் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 310 இலிருந்து 323 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியவர்களில் இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 211 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்