ஊரடங்கு தளர்வால் நோயாளர்கள் வருகை அதிகரிப்பு: பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை!
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும் எனவும் சுகாதார நடைமறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வீட்டிலிருந்து பலரைக் கூட்டிக்கொண்டு வருதலைத் தடுக்க வேண்டும். இங்கு ஒருவர் நோயாளியாக இருக்கின்றபோது ஒரு நாளில் ஒரு தடவை வந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிச் சென்றால் போதுமானதாக இருக்கும்.
இப்போது, வைத்தியசாலையில் இருக்கின்ற பிரிவுகள், தொலைபேசியூடாகக் கிடைக்கும் கோரிக்கைக்கு அமைவாக மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைவிட தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி ஊடாக அவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வடக்கில் காணப்படுகின்ற மிக முக்கியமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கின்ற நிறுவனமான இந்த வைத்தியசாலையை இயக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த நிறுவனமானது, இங்கே வருகின்றவர்களை கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றது.
அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவேண்டும். மிக முக்கியமான ஏனைய நோய்களுக்கு எந்தவித இடர்பாடுகள் இன்றி சிகிச்சையளிக்க உதவ வேண்டும்.
இதேவேளை, கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்புகளைப் பேணிய, வைத்தியசாலைகளுக்கு வெளியே உள்ளவர்களிடமிருந்தும் மாதிரிகளைப் பெற்று சோதனை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கும் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் எதிர்வரும் சில நாட்களில் சோதனை ஆரம்பமாகும்.
அவர்களிடையேயும் காய்ச்சல் அல்லது இந்த தொற்று சம்பந்தமான அறிகுறிகள் தென்படும்போது அவர்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கொழும்பிலிருந்து இப்போது கொண்டுவரப்பட்டவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் பதற்றம் அடையத் தேவையில்லை. இருப்பினும் மிக அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இதன் பரவல் கூடிக்கொண்டு செல்கின்றது.
இதனால் நாங்கள் தொற்றுக்குள்ளானவர்களை விரைவாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு தொற்றுடையவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று பற்றி நாங்கள் அதிகளவு கரிசனை கொள்வதோடு, தொற்றைப் பரவலடையச் செய்யாமல் இருப்பதற்கான உதவிகளைச் செய்யவேண்டும். அதேவேளை, தொற்று பற்றி அதிகளவு பதற்றம் இல்லாமல் கட்டுப்படுத்த உதவவேண்டும்” என்றார்.
கருத்துக்களேதுமில்லை