ரமழானை முன்னிட்டு பணிப்பாளர் வைத்தியர் சுகுணனின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

அந்த அறிவுறுத்தலுக்கு அமைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “எந்த சமய நிகழ்வானாலும், பொது நிகழ்வானாலும் கொவிட்-19 நெருக்கடி நிலையில் மக்கள் ஒன்று கூடும் விடயங்களைத் தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை இருவருக்கிடையே கடைப்பிடிக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

அதனடிப்படையில் பெறுமதிமிக்க எந்த நிகழ்வானாலும் நோய்த் தொற்றின் அடிப்படை விடயங்களை விளங்கிக் கொண்டால் இலகுவாக செயலாற்ற முடியும் என்பதுதான் எனது எண்ணம்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதனடிப்படையில் கொரோனா தொற்று பரவாத வண்ணம் மத நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது.

அதனடிப்படையில் மத நிகழ்வுகளுக்கு அல்லது மதக் கடமைகளுக்கு எதிராக நாங்கள் செயலாற்றப் போவதில்லை. எல்லா மதங்களையும் இனங்களையும் பிராந்தியங்களையும் ஒன்றிணைத்துதான் இந்த தொற்றுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

எனவே, மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும். எமது சுகாதார அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபங்கள் விரைவில் வெளியிடப்படும். அதற்கமைய நாங்கள் அடுத்தக்கட்ட முயற்சிகளை முன்னெடுப்போம்.

மத அனுஷ்டானங்களை கடைப்பிடியுங்கள்! அதனை வீட்டிலிருந்து மேற்கொள்ளுங்கள்! அவ்வாறுதான் சித்திரைப் புத்தாண்டையும் கொண்டாட அறிவுரைகளை வழங்கியிருந்தோம்” என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.