வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை விரைவில் உறவினர்களுடன் சேர்ப்பது கட்டாயம்- வைத்தியர் சத்தியமூர்த்தி

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் முயற்சிப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனைத் தடுக்க முறையான செயன்முறையில் உறவினர்களிடம் அவர்களை சேர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஊடக சந்திப்பை நடத்திய அவர், கொழும்பில் இருந்து யாழிற்கு தப்பித்துவந்தவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாட்டில் பல நாட்களாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் வெளி மாவட்டங்களில் சிக்கியிருப்பவர்கள் உறவினர்களுடன் சேர நினைப்பது தடுக்க முடியாத மன நிலையாகும்.

இதனைவிட கொரோனா என்ற அச்ச நிலைமை பரவியிருப்பதனால் அவர்கள் விரைவாக குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முயற்சிப்பார்கள். ஆகவே அவர்கள் இவ்வாறு அனுமதியின்றி தவறான வழிகளில் வர முயற்சிக்கலாம். அது தடுக்கப்பட வேண்டும்.

அதேசமயம், அவர்களுடைய மனநிலையைப் பொறுத்தவரை அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்கள். ஏதாவது ஒரு வழியை நாடி அவர்கள் உறவினர்களுடன் ஒன்றிணைய முயற்சிக்கக் கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான வழிமுறையில் விரைவாக இவ்வாறு பிரிந்து இருப்பவர்களை இணைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், அவர்கள் இந்த கொரோனா வைரஸை ஒரு கொடிய வியாதியாக எண்ணக் கூடும். அவர்களுக்க போதியளவில் இந்த வைரஸ் தொற்று என்ன செய்துவிடும் என்பது முழுமையாகத் தெரிந்திருக்காது. எதிர்காலத்தில் என்ன நடந்துவிடுமோ என்ற பயப்பீதியில் இருக்கின்ற காரணத்தினால் இவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணையக்கூடிய சகல வழிகளையும் நாடுவார்கள்.

ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு, இதற்குப் பொறுப்பான சகல அதிகாரிகள் அவர்களுக்கான நடைமுறைகளைத் தெரியப்படுத்தி அவர்களை பாதுகாப்பான முறையில் உறவினர்களடன் ஒப்படைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையாககும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.