அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகம்- சிவமோகன்

ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொண்டு நாட்டை சுமூகமான நிலையில் நடத்த வேண்டிய கோட்டாபய அரசாங்கம் அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை எடுத்துவருவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தைப் புறந்தள்ளி செப்ரெம்பர் வரை செயற்பட இருந்த நாடாளுமன்றத்தை தனது ஏதேச்சதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கினார்.

தனக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்த முடியாமல் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போதும்கூட தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஒட்டுமொத்தமாக மறுத்து நின்றார். தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தின் பரிந்துரையைப் பெற்று ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டபோதும் அதையும் சர்வாதிகார ரீதியில் முடக்கிவிட்டார்.

இன்று சர்வாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ள தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகத்திற்குப் புறம்பான தீர்மானங்களை எடுத்து நிற்கிறது. சுதந்திரத் தேர்தல் ஆணைக்குழுவை கடந்த கால பத்தொன்பதாவது திருத்ததத்தின் மூலம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து நிறைவேற்றியிருந்தார்கள். இன்று அந்த சுதந்திர ஆணைக்குழுவும் சர்வாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

அத்துடன் மக்களுக்கான நிவாரணங்களை வழங்கக் கூடிய சூழல் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுதிலும் அந்த நிவாரணங்களையும் வழங்காது நாடாளுமன்றத்தைக் கூட்டி அதற்கான தீர்மானங்களையும் எடுக்காது மக்களை பட்டினிச்சாவில் தள்ளி விட்டிருக்கின்றது இந்த அரசாங்கம்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள எதிர்க்கட்சி தோல்வியடைந்தவுடன் ஜனநாயகத்தை மதித்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தது நாடறிந்த விடயம். எனவே ஜனநாயக ரீதியில் ஒப்படைக்கப்பட்ட ஆட்சியைக்கூட சர்வாதிகார ரீதியில் திசைதிருப்பப்பட்டுள்ளது.

இன்றுள்ள நிலைமையில் ஒரு அவசரகால நிலையைக்கூட பிரகடனப்படுத்தாது நாடாளுமன்றம் கூட்டப்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி தொடர்ச்சியாக இந்த நாடு சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கி நிற்பது கொரோனாவின் கோரப்பிடியை விட கொடுமையானதாக மாறுமா என்ற சந்தேகம் எழுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.