பாடசாலைகள், பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாத்தியமற்ற ஒன்றே கல்வி, உயர்கல்வி அமைச்சர்களிடம் வலியுறுத்தினார் மாவை. சோ.சேனாதிராசா

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றை ஆரம்பிப்பது பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனாவிடமும் உயர் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவிடமும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சுகாதாரத் துறையினரும் பொதுமக்கள் தொடர்பில் அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எச்சரித்தவண்ணமே உள்ளார்கள். இந்த நிலையில் அரசு, மே மாதம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது என எண்ணியுள்ளது. இது எந்தவகையிலும் பொருத்தமற்ற ஒரு செயற்பாடாகும். அவ்வாறு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், தொற்று மேலும் பரவுகின்ற ஏதுநிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கொரோனா தொடர்பில் மாணவர்கள் இணையத் தளங்களிலும், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் வீட்டிலிருந்தவாறே அதன் தாக்கம் தொடர்பில் அறிந்தவண்ணம் அச்சத்துடன் உள்ளார்கள். அவர்களின் மனநிலை மிகவும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அவர்கள் தமது மனதை ஒருமித்து கல்வியைக் கற்கமுடியாத நிலைமைதான் காணப்படும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படுமுன்னர் மாணவர்களுக்கு இரத்தப்பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தடுப்பு ஊசி ஏற்றப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கப்படவேண்டும்.

சுகாதார வைத்திய அதிகாரிகளினதும் கல்விச் சமூகத்தினரதும் ஆலோசனைகளை முறையாகப் பெற்றபின்னரே பாடசாலைகள், பல்கலைக் கழகங்களை ஆரம்பித்தல் வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.