அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு சஜித் தரப்பு தயார்!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த அரசியல் கட்சிகள் தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு தயாராகி வருகின்றன என அக்கட்சியின் பிரசாரத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றும் இதுபோன்ற முயற்சிககளுக்கு சிவில் சமூக இயக்கங்களுக்கும் ஆதரவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “நாங்கள் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடினோம், அநேகமாக ஒரு கட்சியாக நீதிமன்றத்திற்கு செல்வோம். நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் அதனால் பல விடயங்கள் தீர்க்கப்பட முடியும்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் மக்களுக்கு உதவுவதற்கும் எந்தவொரு உண்மையான முயற்சியையும் நாங்கள் ஆதரிப்போம் என்று ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம். இது குறித்து அரசாங்கத்திற்கு எழுத்து மூலமான உறுதிமொழியைக் கொடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்த நேரத்தில் உயிராபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் எங்களுக்கு தேவையில்லை. மேலும் தென் கொரியா தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதாக சிலர் கூறிய கூற்றைக் நான் கண்டிகின்றேன். அந்த நாட்டில் 11 மில்லியன் வாக்காளர்கள் தபால் மூலமும் இலத்திரனியல் மூலமுமே வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இவ்வாறு இலங்கையில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்குப்பதிவுகளை மேற்கொண்டால் வாக்குகள் கொள்ளையடிக்கப்படும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்