முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரம் இன்றைய தினம்(சனிக்கிழமை) நண்பகல் சித்தங்கேணி பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள சித்தங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். அவ்வேளை சித்தங்கேணி சந்தியில் கடமையில் நின்ற பொலிசார் அவரை மறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

அதன் போது அவர் தான் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிகாரி இவ்வாறு என்னுடம் தகாத வார்த்தைகள் தூசணத்தால் சீருடையுடன் நின்று பேசுவது நாகரிகமில்லை. என் வயதிற்கு கூட மரியாதை கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

அதனால் ஆத்திரமுற்ற பொலிசார் தூசணத்தால் பேசியவாறு அவரது தண்ணீர் கானை பறித்து வீதியில் போட்டு அடித்தும் அவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிசாரின் தாக்குதலால் அவர் வீதியில் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளார். அப்போது பொலிசார் அவரை நோக்கி ” நாங்கள் மூன்று மாத காலமாக தண்ணீர் இல்லாம வீதியில் நிற்கிறோம்.

உனக்கு ஒருநாள் தண்ணீர் இல்லாம இருக்க முடியாதா” என பேசி தண்ணீர் எடுக்க அனுமதிக்காது அவரை வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டி அனுப்பினர். அதனால் அவர் தண்ணீர் எடுக்காம வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இதேவேளை இன்று காலை வட்டுக்கோட்டை மாவடி முருகமூர்த்தி ஆலய தண்ணீர் தாங்கியில் தண்ணீர் முடிந்தமையால் ஆலயத்திற்கு சென்று மோட்டர் போட சென்ற ஆலய நிர்வாகி மீதும் வட்டுக்கோட்டை பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த ஆலய நீரையே மூளாய் , அராலி , சித்தங்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் நீர் தாங்கியில் நீர் முடிந்துவிட்டது.

மோட்டர் போட்டு விடுமாறு ஊரவர்கள் கோரியதனால் , ஆலய நிர்வாகி மோட்டார் போடுவதற்காக ஆலயத்திற்கு சென்ற போது வீதியில் நின்ற பொலிசார், ஊரடங்கு நேரத்தில் ஏன் வெளியே வந்தார் என அவர் மீது கொட்டனால் தாக்கியுள்ளனர்.

அதன்போது அவர், ஆலய நீர்த்தாங்கியில் நீர் முடிந்து விட்டது. அந்த நீரையே ஊரவர்கள் பயன்படுத்துறவர்கள். நான் போய் மோட்டார் போட வேண்டும் என பொலிசாருக்கு கூறினார்.

இதன்போது பொலிசார், நாங்கள் தண்ணீர் இல்லாம மூன்று மாதமா வீதியில் நிற்கிறோம். அவர்கள் ஒரு நாள் தண்ணீர் இல்லாம இருக்க மாட்டார்களே ” என கேட்டு ஆலய நிர்வாகி மீது கொட்டனால் அடித்து அவரை வீடு செல்ல பணித்தனர். அதனால் அவர் வீடு திரும்பினார்.

குடிநீர் எடுக்க சென்றவர்கள் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிசாரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்தும் பலரும் கடும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை அயல் வீட்டாருடன் கதைத்துக்கொண்டு இருந்த குடும்பஸ்தர் மீதும் மது போதையில் சென்ற வட்டுக்கோட்டை பொலிசார் ஊரடங்கு நேரத்தில் அயல் வீட்டாருடன் என்ன கதை என கேட்டு அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தி இருந்தனர்.

அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய தினம் குடிநீர் எடுக்க சென்ற வயோதிபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.