தந்தை செல்வா என்ற தலைவர் எம்மண்ணில் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்தேசியம் பிறந்திருக்காது. (பா.அரியநேத்திரன்)

வரலாறுகள் படைத்த தலைவர்களும் இருக்கிறார்கள், வரலாற்றைக்கொண்ட தலைவர்களும் இருக்கின்றார்கள். எம் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். 1977 ஏப்ரல் 26, ம் திகதி எம்மைவிட்டு பிரிந்தார்.இன்று அன்னாரின் 43, ஆண்டு நினைவாகும்.

தந்தை செல்வா என்ற பெரும் தலைவர் பிறக்காமல் இருந்திருந்தால் வடக்கு கிழக்கு தமிழர்தாயகம் என்று பேசக்கூடிய நிலைகூட உருவாகி இருக்காது.
குறிப்பாக கிழக்கு தமிழர்களுக்கு முகவரி கொடுத்த பெருமை தந்தை செல்வா அவர்களையே சாரும் .

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சியாக மலர்ந்தது. எனினும், அப்போது தமிழ் மக்கள் சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்கவில்லை. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலேயே கட்சி வெற்றி பெற்றது. கோப்பாய் தொகுதியில் அமரர் கு.வன்னியசிங்கம் வெற்றி பெற்றார். அதுபோலவே திருகோணமலையில் அமரர் இராஜவரோதயம் வெற்றி பெற்றார். திருகோணமலை திருக்கோணேஸ்வரக் கோயிலின் தர்ம கர்த்தாவாக இருந்த அன்னவர்தான் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தை வடிவமைத்து கொடுத்தவர்.
அன்றைய நாடாளுமன்றம் காலி முகத்திடலுக்கு அருகில் இருந்தது. தமிழரசுக்கட்சியினரும் தமிழ் மொழி உரிமையில் கரிசனை கொண்டவர்களும் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். சிங்கள இனவாதிகளும், அடாவடியில் ஈடுபடுபவர்களும், காடையர்களும் ஒன்று கூடினர்.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை மிகக்கொடூரமாக தாக்கினர். அந்த நேரத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சத்தியாகிரகிகளை காப்பாற்ற முனைந்தார். அவ்வேளை, மழை தூரிக்கொண்டிருந்தது. அருகில் நின்ற பிரதமர், “தூரலில் அவர்கள் நனையட்டும்” எனக்கூறி பொலிஸ் அதிகாரி செய்ய முனைந்த கடமையை தடுத்துவிட்டார். காலி முகத்திடலில் மட்டுமல்ல தமிழர்களின் இரத்தம் வழிந்தோடியது, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பிலிருந்து வந்த புகையிரதங்களில் தமிழ்ப்பிரயாணிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் இரத்தத்தில் உறைந்தார்கள். அவர்கள் செய்த பாவம் தான் என்ன? அவர்கள் இலங்கையில் தமிழர்களாகப் பிறந்தது தானே. தமது தாய் மொழி தமிழ்மொழிக்கு உரிமை கேட்டது தான். தாக்கியவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பண்டா செல்வா உடன்படிக்கை:
தனிச்சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியானது பல்வேறு சத்தியாக்கிரகப்போராட்டம் உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது. அதன் பிரகாரம் இந்தப்பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என்றார் அன்றைய பிரதமரான பண்டாரநாயக்கா.
இன்றைய நிகழ்வை அன்று சொன்ன தந்தை செல்வா
இந்த இரு தலைவர்களின் சந்திப்பையும் அவர்களின் பேச்சையும் டெயிலி நியுஸ் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. காரின் கதவடியில் வந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் கைகளைப்பிடித்து “பல முறை நிதானமாக சிந்தனை செய்து தான் உங்களை சந்திக்க நான் ஒத்துக்கொண்டேன். இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஏதேனும் ஒன்றினை செய்தே ஆகவேண்டும். இன்றைய சூழலில் நாங்கள் ஒன்றித்து இப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாம் இறந்த பின்பு நாட்டிற்கு இப்பிரச்சினை பெரும் பேராபத்தை உண்டாக்கும்” என்று அன்றைய நாள் தந்தை செல்வநாயகம் அவர்கள் தெரிவித்திருந்தது இன்று நிஐத்தில் நடந்தேறிவிட்டது. தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனமும், பேராபத்தை நாடு சந்திக்கும் என்ற அவரின் பயமும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சாரம்
ஒப்பந்தம் என்பது பலரின் தலையெழுத்துக்களையும் நாட்டின் சூழலையும் மாற்றிவிடும்.

பண்டா – செல்வா ஒப்பந்தம்
தமிழ்மக்களுக்கான சிறந்ததொரு தீர்வை முன்வைத்திருந்தது. இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட்டதுடன் வடக்கு மாகாணம் ஒரு பிராந்தியமாகவும், கிழக்கு மாகாணத்தில் நாட்டின் இன்னொரு சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் மக்களையும் அவர்களின் தனித்துவத்தையும் மதிக்கும் நோக்கிலும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேலான பிரதேசங்களாக வகுக்கப்பட்டது. இதன் பலனாக முஸ்லிம் மக்களும் தமிழர் தாயகத்தின் தனித்துவமான இனம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவர்களும் பிராந்தியத்திற்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தியது அவ்வொப்பந்தம்.
ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய அம்சம்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களாக விவசாயம், கூட்டுறவு, காணி, காணி அபிவிருத்தி, குடியேற்றம், சுகாதாரம், கைத்தொழில், கல்வி, மீன்பிடி, வீடமைப்பு சமூக சேவைகளும் வீடமைப்பும் என்பனவற்றோடு தமிழ் ஒரு தேசிய சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி சிங்கள மொழிக்கு குந்தகம் இல்லாமல் தமிழிலும் நடைபெறும் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, குடியேற்றங்களும் கல்லோயா அபிவிருத்தித்திட்டமும் அதில் உள்ளடங்கியிருந்தது.

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
தந்தை செல்வாவின் இன்னொரு தீர்க்க தரிசனத்தையும்  எடுத்துக்காட்ட முடியும். “தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.” இன்றைய நிகழ்வுகளை உற்று நோக்கின் இந்த வார்த்தைக்குள் பொதிந்து கிடக்கின்ற உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும்.

1976, மே, 14,ம் நாள் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் எடுத்த தமிழீழ தனியரசு கொள்கை தீர்மானம் வடக்கு கிழக்கு மக்களின் அங்கீகார தேர்தலாக 1977,யூண்.24,ம் அமைந்தது அதில் மட்டக்களப்பு கல்குடா தொகுயைன தவிர்ந்த வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தொகுதிகளிலும் தமிழீழத்துக்கான அங்கீகாரம் கிடைத்தது.

இதில் வேத்தனை என்னவெனில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய ஆணையை தந்தை செல்வா பார்பதற்கு முன்னமே சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் 1977, ஏப்ரல்,26,ல் எம்மை விட்டு பிரிந்தார்.அவரின் பிரிந்த போதும் அவரின் கொள்கை இன்றும் எம்மத்தியில் உள்ளது என்பதை எவரும் மறுக்கமுடியாது.

ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் இடம்பெற்று
முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி உடைக்கப்பட்டாலும் , தமிழ் மக்களுக்கான தலைமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று செயல்பட்டுவருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை வரலாறு காணாத வெற்றியினை பல தேர்தல்களில் மக்கள் வெற்றியடைய செய்தனர். ஆனால், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு இன்று வரை இல்லை என்பது உண்மை.

இந்நிலையில் தந்தை செல்வா இறைபதம் அடைந்து 43, ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று 2020,ம் ஆண்டில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் எந்த ஒரு அரசியல் உரிமை சுதந்திர வாழ்வு இல்லாமல் இனவாத அரசில் ஆட்சியில் தான் வாழ்ந்து கொண்டிருப்பது கண்கூடு,

சர்வதேச ரீதியில் எமது ஈழத்தமிழர்களின் விடுதலை அரசியல் கூர்மை பெற்றாலும் இலங்கை அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களை அடிமைகளாக வைத்துள்ளதையே காணமுடிகிறது.
இருந்தபொதும் தந்தை செல்வா அவர்களால் அத்திவாரம் இடப்பட்ட தமிழ்தேசியம் என்ற உன்னத செயல்பாடு உயிருடன் தந்தை செல்வா மறைந்து இந்த 43, ஆண்டுலும் செயல்படுகிறது என்பது மட்டுமே உண்மை.
தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது என்ற வசனத்திற்கு அமைவாக தந்தை செல்வா விட்ட பணியை தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் நினைவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.