தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள் – ரட்ணஜீவன் ஹூல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மிகக் குறைந்த தினமாகவே ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டள்ளதாகவும் அவசர நிலைமைகள் தோற்றம் பெற்றால் மட்டுமே அத்திகதி மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம கூட்டப்படவேண்டும் என்பதே நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படுகின்றது.

அதற்கமைவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியாது போயுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில் தான் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திகதியில் தேர்தலை நடத்தக்கூடாது என்று எமக்கு அழுத்தங்கள் அளிக்கப்படுகின்றன.

மேலும், பழைய நாடாளுமன்றை கூட்டுமாறும் சில தரப்பினர் வலியுறுத்துகின்றார்கள். மறுபக்கத்தில் எம்மை சுயாதீன ஆணைக்குழுவாக அறிவித்தபோதும் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் காணப்படும் 1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க தேர்தல்கள் திருத்தச்சட்டத்திற்கு அமைவாகவே அறிவிப்புக்களைச் செய்துள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிடத்தில் இல்லை. ஆகவே அதிகாரங்கள் இல்லாத ஆணைக்குழவிற்கு அழுத்தங்களை அளிப்பதால் பயனில்லை எனவும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

நாடாளுமன்றை மீளக் கூட்டுவதற்கோ அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தவதற்கான காலத்தினை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளுதல் உட்பட இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும், சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியே கொண்டிருக்கின்றார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தீர்வினை வழங்க கூடியவரை நாடுவதை விடுத்து தீர்வினை வழங்க முடியாத வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை.

மேலும் மே இரண்டாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலும் தேர்தல் திகதி உள்ளிட்ட எந்தவிடயங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தளவான சாத்தியங்களே காணப்படுகின்றன.

ஒருவேளை நிலைமைகள் மோசமடைந்தால் தேர்தல் திகதிக்கு சொற்பகாலம் முன்னதாக மாற்றுவழிமுறை குறித்த அறிவிப்புக்களை ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்