யானையின் ஆள் ஹுல்! – விளாசுகின்றது ‘மொட்டு’

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் செயற்படுத்திவருகின்றார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் நடத்துவதாக ஆளுங் கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்து தங்கள் நிலைப்பாடு என்னவென்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்தானந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஹுல் என ஒரு உறுப்பினர் இருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கான அரசியலையே  முழுமையாக முன்னெடுத்து வருகின்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சிறப்பாகச் செயற்படுகின்றார். ஆனால், தேர்தலை வைக்கவேண்டாம் என்று சக உறுப்பினர்  ஹுல் நீதிமன்றம் செல்கின்றார். இதன் நோக்கம் என்ன?

தேர்தல்கள் ஆணைக்குழு என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். மக்கள் பக்கம் நின்று, அரசமைப்பின் பிரகாரம் தீர்மானங்களை எடுக்கவேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசரப்படவில்லை என்றும், ஜுன் 20 இல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.