நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்..!
நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற பாதுகாப்பு மாற்றங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிய விரும்புகின்றோம்.
மேலும் அச்சுறுத்தல் காணப்படுகின்றனவா அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றனவா? வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாற்ற வேண்டிய அளவுக்கு ஏதும் அச்சுறுத்தல் இருக்கின்றனவா என்பது குறித்த எந்த தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அமைதியைப் பேணுவதற்கும் ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறுகளான நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பது அனைத்து பிரஜைகளின் கடமையாகும் என்றும் குறிப்பாக வரிசெலுத்தும் மக்களின் கடமை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறுகளான நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியன ஒன்றோடு ஒன்று தாக்கத்தை ஏற்படுத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் முக்கிய மூன்று கூறுகளின் தனித்துவத்தை பாதுகாப்பதில் இலங்கைக்கு மிக நீண்ட வரலாற்று பாரம்பரியம் ஒன்று உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை