பஸ்ஸில் வந்த சக சிப்பாய்க்குக் கொரோனா முல்லையில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார் .

கடந்த 21ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் திரும்பும்போது இவர்களுடன்கூடப் பயணித்த வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் ஸ்ரீபுரவைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்தே குறித்த நடவடிக்கையை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

புதுமாத்தளன் பகுதில் உள்ள இராணுவப் பயிற்சி முகாமில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் முகாமில் 71 படையினரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் இன்று காலை அந்தத் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் படையினர் விடுப்பில் வீடு சென்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி ஒழுங்குபடுத்தபட்ட தனியார் பஸ் ஒன்றில் கடமைக்குத் திரும்பியுள்ளனர். வெலிஓயாவைச் சேர்ந்த தனியார் ஒருவரின் பஸ்ஸில் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்த பஸ்ஸில் விடுப்பில் வீடு திரும்பிய வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவரும் பயணித்துள்ளார்.

அவர் அநுராதபுரம் ஸ்ரீபுர என்ற இடத்தில் இறங்கியுள்ளார். இந்தநிலையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பஸ் வெலிஓயா, முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு படை முகாங்களுக்குச் சென்று படையினரை இறக்கியுள்ளது. சுமார் 71 படையினர் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட முகாம்களில் இறங்கியுள்ளனர்.

அவர்களை இனங்கண்டு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தலில் வைக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்தோடு பஸ்ஸை செலுத்திய சாரதி மற்றும் நடத்துநரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையையும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மேற்கொண்டுள்ளது.

இந்த பஸ்ஸில் பயணம் செய்து மணலாறு பகுதியிலுள்ள படை முகாம் ஒன்றில் இறங்கிய சிப்பாய்கள் இருவருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் மேலதிக பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, பஸ்ஸில் வந்தவர்கள் எந்தெந்த இடங்களில் தரித்து நின்றனர்? கடைகளுக்குச் சென்றனரா? உள்ளிட்டவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.