வடக்கு கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் வைத்தியசாலை?
வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அக்கராயன் வைத்தியசாலை இடம்பெற்ற வைத்திய சேவைகளில் சிலவற்றை ஸ்கந்தபுரம் ஆயுள்வேத மற்றும் பொது கட்டடங்களுக்கு மாற்றுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவனை தொடர்புகொண்டு வினவியபோது, இந்த விடயம் குறித்து தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் இவ்விடயம் தொடர்பாக மாகாண சுகாதார திணைக்களத்துடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.
அக்கராயன் பிரதேச வைத்தியசாலையானது 15 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு சேவை வழங்குகின்ற ஒரு பிரதேச வைத்திசாலை எனவும், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் இந்த வைத்தியசாலையினை நம்பி வாழ்கின்ற பொதுமக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் இன்றி குறித்த வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டமை மக்கள் மத்தியில் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா நடவடிக்கைகளுக்கு என முழங்காவில் கடற்படை தனிமைப்படுத்தல் நிலையம், இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையம், பளை தனிமைப்படுத்தல் நிலையம், என்பன காணப்படுவதோடு தற்போது அழகாபுரி பாடசாலையினையும் விமானப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை