2018 .இல் பெற்ற வரலாற்றுத் தீர்ப்பை 2020 இலும் சுமந்திரன் பெறுவாரா….?

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால், அரசைக் கவிழ்க்க முயற்சிக்காமல், அரசின் சட்டபூர்வமான எந்தச் செயற்பாட் டுக்கும் தடங்கல் கொடுக்காமல், முழு ஆதரவு அளிக்கத் தயார் என்ற உறுதிப்பாட்டைத்  தெரிவிக்கும் கடிதத்தை கூட்டு எதிரணிகள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கவுள்ளன.

இந்தக் கடிதத்தில் நேற்று மாலை ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்மனோகணேசன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒப்பமிட்டனர்.

இன்று காலை ஜனாதிபதிக்கு இந்தக் கூட்டறிக்கை அனுப்பிவைக்கப்பட்டதும் அது பகிரங்கப்படுத்தப்படும்.

அது பகிரங்கப்படுத்தப்பட்டதும் அந்த கூட்டறிக்கை வாசகங்களைத் தாங்களும் ஆதரிக்கின்றனர் என்ற பகிரங்க அறிக்கையை ஜே.வி.பியும் விடுக்கும் எனத் தெரிகின்றது.

அத்தோடு இந்தக் கூட்டறிக்கை ஒட்டு மொத்த எதிரணியால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஓர் ஆவணமாகும் என எதிர்க்கட்சிக் கூட்டணித் தரப்புகள் கருதுகின்றன.

இப்படித் தாங்கள் இறங்கி வந்து, அரசுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு வழங்குவோம் என்று கூட்டறிக்கை விடுத்தாலும் அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  கவனத்தில் கூட எடுக்கமாட்டார், சில சமயங்களில் அந்தக் கூட்டறிக்கைக் குப் பதிலோ, பிரதிபலிப்போ காட்டக் கூட முயலமாட்டார் என்பது எதிரணித்தரப்புக்கு நன்கு தெரியும்.

தங்கள் கூட்டறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய சட்டையே செய்யமாட்டார் என்று தெரிந்திருந்தும் எதிரணி இப்படி கீழே இறங்கி வந்து நிபந்தனை ஏதுமற்ற ஆதரவு தரத் தயார், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுங்கள் என்று பணிந்து கூட்டறிக்கை விடுவதற்குக் காரணமும் உண்டு .

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு வாய்ப்பில்லா விட்டால், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்பு வெற்றும் வறிதுமாகிவிடும் என்பதுதான் எதிரணிகளின் நிலைப்பாடு.

இது தொடர்பாக நீதிமன்றத்தின் உத் தரவைப் பெறுவதுதான் எதிரணியின் திட்டம்.

நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட முன்னர், இந்த விடயத்தைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு நாங்கள் எடுத்த எல்லா வழி வகைகளும் பலனளிக்காதமையால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடி னோம் என்று காட்டுவதற்காகவே இப்படி ஜனாதிபதியிடம் மண்டியிடும் பாணியிலான கூட்டறிக்கை.

இப்படி நாம் உத்தரவாதம் அளித்தும் கூட, ஜனாதிபதி இறங்கி – இரங்கி – வரவில்லை , அதனால் நீதிமன்றத்தைத் தலையிடக் கோருகின்றோம் என்று மன் றில் முறையிடுவது எதிரணியின் திட்டம்.

சரி, இந்த முறையீட்டை ஜனாதிபதியிடம் கொடுத்தாயிற்று – அவரிடமிருந்து பதிலோ, பிரதிபலிப்போவரவில்லை என் றால் எப்போது நீதிமன்றத்தை நாடும் எதிரணி? எப்போது வழக்குத் தொடுக்கப்படும்?

புதிய நாடாளுமன்றம் ஜூன் 2ஆம் திகதி கூட வேண்டுமானால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அத்திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்காக ஐந்து வார காலத்துக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரத்துக்கு குறைந்த பட்சம் ஐந்து வார காலமாவது வழங்கப்பட வேண்டும்.

நாளைய தினத்துக்குப் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படுமானால் நிச்சயம் அத்தேர்தல் ஜூன் 2ஆம் திகதிக்குப் பின்னர்தான் நடத்தப்பட முடியும்.

அதனால் நாளைவரை பொறுத்திருப்பது எதிரணியின் திட்டம்.

அதற்குப் பின்னர் நீதிமன்றத்துக்குப் போனால் தான் –

ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு இனி மேல் வாய்ப்பே கிடையாது. அதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவு செல்லுபடியாகாது எனத்தீர்ப்பளியுங்கள் என்று கோரமுடியும்.

ஆக, ஜனாதிபதியின் உடனடிப் பதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இல்லாவிட்டால் நீதிமன்றம் தான் என்பது எதிரணி நிலைப்பாடு.

எதிரணிதரப்பில் நீதிமன்றக் காரியங்களை கையாளப் போகின்றவர் ஜனாதி பதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்தான்.

2018இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன நாடாளுமன்றத்தைக் கலைத் தமை தவறு என்ற வரலாற்றுத் தீர்ப்பைப் பெற்றுப் பெருமிதம் கொண்டவர் அவர்.

2020 இல் ஜனாதிபதி கோட்டாபய நாடாளுமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை தவறு என்று வாதிட்டுவெல்வாரா?

மார்க் ட்வையினின் ஒரு சொற்றொடர் உண்டு. அதை அப்படியே ஆங்கிலத் தில் கூறி முடித்து விடுகிறேன்.

“History never repeats itself but it rhymes….!

– மின்ன ல் –

 

நன்றி: காலைக்கதிர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்