பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றும் திட்டமில்லை! – இராணுவத் தளபதி வாக்குறுதி

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பாடசாலைகளை அரசு தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றி வருகின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட மாட்டாது என நான் உறுதியாகக் கூற விரும்புகின்றேன். அனைத்துப் படையினரும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்க முடியாமல் இருப்பதால் சில பாடசாலைகளை வழங்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்தநிலையில், பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்ற வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவ்வாறு வெளிவந்த செய்தியை நிராகரிக்கின்றேன். தனிமைப்படுத்தல் நிலையங்கள் புறம்பாக இருக்கின்றன. அவற்றை நாம் பராமரிப்போம்” – என்றார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை வழமையான அப்பகுதி பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒன்று எனவும், பொலிஸார்தான் அப்பகுதிகளில் பாதுகாப்பில் உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.