02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தணிக்க பொருத்தமான திட்டத்தை பின்பற்ற தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது என்றார்.

அவர்களிடம் பல வழிகள் இருந்தபோதிலும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க அரசாங்கமும் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முதல் 100 நோயாளிகள் அடையாளம் காண சுமார் 57 நாட்கள் ஆனபோதும் கடந்த இரண்டு நாட்களுக்குள் 100 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதானது பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறியதன் விளைவு என்றும் சுட்டிக்காட்டினார்.

தினமும் 5,000 முதல் 6,000 பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தேர்தல் நடத்த, மக்கள் அச்சமடைய கூடாது என கருத்தை உருவாக்க விரும்பியதால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் எரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டினார்.

சுகாதாரத்திற்கும் மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை. இருப்பினும் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்