இலங்கையின் நடவடிக்கை கவலையளிக்கின்றது – மனித உரிமைகள் ஆணைக்குழு

கோவிட் -19 தொற்றுநோயால் அவசரகால நிலைகளை அறிவித்த பல நாடுகளில் பொலிஸார் நூறாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து அல்லது தடுத்து வைத்து மற்றும் கொலை செய்தமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

கருத்து வேறுபாடுகளை குறைக்கவும், மக்களைக் கட்டுப்படுத்தவும் அவசரகால சட்டத்தை ஒரு ஆயுதமாக அரசாங்கங்கள் பயன்படுத்தக்கூடாது என ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 80 நாடுகள் அவசரநிலைகளை அறிவித்துள்ளன, அவற்றில் 15 இடங்களில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகளவாக இருப்பதாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதில் நைஜீரியா, கென்யா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், இலங்கை, எல் சல்வடோர், டொமினிகன் குடியரசு, பெரு, ஹோண்டுராஸ், ஜோர்டான், மொராக்கோ, கம்போடியா, உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் ஹங்கேரி ஆகியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாடுகளில் சில தொற்றுநோயுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளன, கடந்த 30 நாட்களில் ஊரடங்கு உத்தரவு மீறல்களுக்காக கைது செய்யப்பட்ட 120,000 பேருடன் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது.

தென்னாபிரிக்காவில், ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் சவுக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை நைஜீரியாவில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் 18 பேரைக் கொன்றதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.