அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர், மக்கள் அச்சமடைய தேவையில்லை..!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படையினரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு வெலிசர கடற்படை முகாமில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்றுநோய் மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கடற்படையினரில் சிலருக்கு வைரஸின் அறிகுறிகள் முன்னர் காட்டவில்லை என்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முகாமுக்குள் சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை மொத்தம் 180 க்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று கணடறியப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெலிசறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முகாமுக்குள் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நோய் பரவாமல் தடுக்க ஒரு முறையான செயற்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் குறித்த கடற்படை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.