அபாயகரமான வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் சுதேச மருத்துவம்- மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர்

அபாயகரமான வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுதேச மருத்துவத்திற்கு உள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் மருத்துவர் இராஜராஜேஸ்வரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாள்தோறும் மோர் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் மூன்று மருந்து உற்பத்தி நிலையங்களில் தயார் செய்யப்படும் மருந்துகள் பிரதேச செயலக மட்டத்திலும் வைத்தியசாலைகள் ஊடாகவும் இலவசமாக வழங்கப்படுகிறன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடங்கலாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 2 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துப் பொதிகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளைப் பாவிக்குமாறு கோரிக்கை விடுத்த அவர், கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதனைத் தடுக்கும் முகமாக ஆயுர்வேதத் திணைக்களம் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதில் ஒரு கட்டமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

குறிப்பாக, உலக நாடுகள் ஆங்கில மருந்துகளுடன் சித்த ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்தி கொவிட் தொற்றினால் இறப்பவர்களின் விகிதத்தினைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இவை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்