ஜூன் 20இல் தேர்தலா? மே 15 இல் முடிவு! – கூறுகிறார் மஹிந்த தேசப்பிரிய

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் மே 15 ஆம் திகதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு வழமைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்தத் தினத்தில் தேர்தலை நடத்த முடியாது.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு சுகாதாரப் பகுதியினரின் உத்தரவாதமும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாடு வழமைக்குத் திரும்பியதும் 35 நாட்களுக்குப் பின்னரே வாக்களிப்பை நடத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு திருப்தி ஏற்படவேண்டும்.

இந்த விடயம் குறித்து அரச ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சுயாதீன குழுக்களின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும், யோசனைகளையும் பரிசீலித்தே தேர்தலை நடத்துவது பற்றி முடிவு  எடுக்கப்படும்.

தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது முன்னெடுத்து வருகின்றது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளே இடம்பெற்று வருகின்றன.

பொதுத்தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை. ஆனாலும், 10 நாட்களுக்கு ஒரு தடவை கூடி, நாட்டின் சுகாதார நிலைமை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

தேர்தலைப் பிற்போடுவது உகந்த நடவடிக்கை அல்ல. ஆனாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார ரீதியிலான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் விருப்பம் இல்லாதபோதிலும், தேர்தலைப் பிறிதொரு நாளுக்குப் பிற்போட வேண்டிய நிலைமையே ஏற்படும்” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.