ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்பு – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் புத்தளம் அமைப்பொன்றுக்கு தொடர்புள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் ஒன்று, ஒரு வருடத்துக்கு பின்னர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், புத்தளத்தை மையப்படுத்தி இயங்கிய அமைப்பொன்று தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, அந்த இடத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்குள் அவர்களை ஈடுபடுத்தும் விதமான போதனைகள் நடாத்தப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரானும் குண்டுத் தாக்குதலை நடாத்திய மேலும் சில குண்டுதாரிகளும் அவர்களுக்கான அடிப்படைவாத போதனைகளை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தோப்பூர் பகுதி ஆயுத பயிற்சி முகாமில் துப்பாக்கிகளை கழற்றி பூட்டுதல், சுத்திகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் செயன்முறை பயிற்சி ஊடாக போதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ள சிலருக்கு பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்த காட்சிகள், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் வீடியோ வடிவில் காண்பிக்கப்பட்டும் அடிப்படைவாத சிந்தனை தூபமிடப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் 14 சி.ஐ.டி. , சி.ரி.ஐ.டி. குழுக்கள் விசாரித்து வரும் நிலையில், சி.ஐ.டி. பொறுப்பில் உள்ள 14 வயதான மத்ரஸ மாணவன் ஒருவன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி புத்தளம், வனாத்துவில்லு – காரை தீவு பகுதியில் இயங்கியுள்ள மத்ரஸாவை மையப்படுத்தியே, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்டதாக நம்பப்படும் அமைப்பு செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக வனாத்துவில்லு பகுதியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட லெக்டோ தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 10 முதல் 15 கிலோ மீற்றர்களுக்குள் அமையப்பெற்றுள்ள குறித்த மத்ரஸா, 2008 ஆம் ஆண்டு ஆம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டுவரை நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அந்த இடத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகள் போதனைச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை குறித்த மத்ரஸாவில் 35 முதல் 40 பேர் வரை கற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
அத்துடன் தோப்பூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயுத பயிற்சி மையமாக இருந்த இடத்தில், பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டிருந்த ஆயுதங்கள் ஏற்கனவே சி.ஐ.டி.யால் மீட்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் நபர்கள் குறித்த அயுதங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதும் 92 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் அட்டத்தின் கீழ் அந்த சிறப்புக் குழுக்களின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இதுவரை மொத்தமாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 197 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 197 பேரில் 92 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டும் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை