நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு மங்கள ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று(புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “அரச செலவுகளுக்குப் பயன்படுத்துவதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான இடைக்காலக் கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

பொதுவாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வருடங்களில் புதிதாகத் தெரிவாகும் ஜனாதிபதி அவரது கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக வரவு – செலவுத்திட்டத்தைத் தயாரித்து நிறைவேற்றிக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடைமுறை அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை நிறைவேற்றாது.

எனினும் உங்களது அரசாங்கம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் பதவியேற்றுக்கொண்டு, சுமார் 3 மாதகாலம் கடந்துள்ள நிலையிலும் நிதியமைச்சர் வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை.

மக்களுக்கு வெளிப்படுத்தாத சில காரணங்களின் அடிப்படையில் உங்களது அரசாங்கம் வரவு – செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்காமையினாலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியினாலும் நாடு ஒரு அரசியலமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கே இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து அரசாங்கம் நெருக்கடி நிலையொன்றை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே அதன் பின்னரான காலப்பகுதிக்கு அரச உத்தியோகத்தர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் மேலும் பல செலவுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெறுவதற்கு உடனடியாகப் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.