வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்: சுகாதார பிரிவினர் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையின் போது குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை வீரர் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கு முன்னர் வவுனியாவில் பல இடங்களுக்கு சென்றுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானமையை அடுத்து அவர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்களை மக்கள் நலன்கருதி சுகாதாரத் திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இராணுவ வீரர், வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள AKS சேவீஸ் நிலையம் மற்றும் சிறி பலசரக்கு வாணிபம், கந்தசாமி கோயில் வீதியில் அமைந்துள்ள செல்வா, கொண்டா இரு வாகன உதிரிப்பாக விற்பனை நிலையம், கந்தசாமி வீதியிலுள்ள S.J பலசரக்கு வாணிபம், சூசைப்பிள்ளையர் குளம் சந்திரன் வாகனம் திருத்தும் இடம், வவுனியா வைத்தியசாலை வீதியில் உள்ள விஜயா வாணிபம், பழைய பேருந்து நிலைய கட்டடத்திலுள்ள அபிலாஷ் பார்மசி,‌ பஜார் வீதியிலுள்ள சரவணாஸ் ஆடை விற்பனை நிலையம் போன்றவற்றிக்கு கடந்த 22ஆம் திகதி சென்றுள்ளார்.

மேலும் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையிலுள்ள MPCS எரிபொருள் மீள் நிரப்பு நிலையம், இரண்டாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள செலிங்கோ காப்புறுதி நிலையம், வவுனியா வைத்தியசாலை வீதியிலுள்ள மகஜனா கட்டட உதிரிபாக நிலையம் போன்ற இடங்களுக்கு அவர் 23.04.2020 அன்று சென்றுள்ளார்.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் உரிமையாளர், ஊழியர்கள் அவர்களின் குடும்படுத்தினருடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, குறித்த கடற்படை வீரர் 22, 23 ஆகிய இரு தினங்களில் மேற்கூறப்பட்ட இடங்களிற்கு சென்றமையால் வவுனியாவில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே, வவுனியாவில் ஊடரங்கு தளர்த்தப்படும் சமயத்தில் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.