மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்.பி சிவமோகன்

வவுனியாநிருபர்
இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சுகாதார மயப்படுத்தப்பட்ட இராணுவத்தினருடன் ஒன்றிணைந்த ஒரு செயலணி உருவாக்கப்பட வேண்டும். அதுவும் மாவட்டத்திற்கு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உருவாக்கப்படும் செயலணியில் அந்த மாவட்ட அரச அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தலைமைகளில் உருவாக்கப்பட வேண்டும்.

அதுவும் மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்திற்குரிய, வியாபாரத்திற்குரிய சகல துறைகளுக்கும் உரிய தலைவர்கள் அழைக்கப்பட்டு ஒரு மாவட்டத்திற்குரிய செயலணி அமைப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. அதனை உடனடியாக செய்ய வேண்டும். இந்த மாவட்ட செயலணி என்ன செய்ய வேண்டும் என்பதை கலந்துரையாட வேண்டும். தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்புக்காக ஒரு வைத்தியசாலையை தெரிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே அந்த வைத்தியசாலை நோய் நிலையம் பற்றி கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்களின் தேவை குறித்து கலந்துரையாட வேண்டி இருக்கிறது. நோய் தடுப்பு செயற்பாடுகள் கிராம மட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து கலந்துரையாட வேண்டி இருக்கிறது.

மக்களை முடக்காத வகையில் பொருளாதார மேம்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான நடைமுறைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியான பிரச்சனைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல பாஸ் நடைமுறை இன்று அரச அதிபரிடம் இருந்து மாறி அரச அதிபருக்கும், சுகாதார வைத்திய அதிகாரிக்கும் தெரியாமல் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சென்றுள்ளது. இதன் மூலம் ஒரு இராணுவ அராஜகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாஸ் நடைமுறைகள் கூட இலகுபடுத்தப்பட வேண்டும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு மாவட்ட ரீதியான கொரோனா தடுப்பு செயலணிகள் இலங்கை எங்கும் உருவாக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரிய சிக்கலில் எமது மக்கள் தள்ளப்படுவார்கள்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மாவட்டத்திற்கு மாவட்டம் நடைமுறைப்படுத்த கவனம் செலுத்த வேண்டும். இதனை இன்னும் அதிகரிக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் 28 ஆயிரம் கோடி பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளார்கள். ஆனால் சுகாதார துறைக்கு 10 ஆயிரம் கோடிக்குள் தான் ஒதுக்கிறார்கள். சுகாதார துறைக்கு இரட்டிப்பாக்க வேண்டும். இதனை பாராளுமன்றத்தின் ஊடாக செய்ய முடியும். 24 மாவட்டத்திற்கும் பீசீஆர் இயந்திரத்தை எடுக்க அரசாங்கத்தால் முடியும். ஆனால் அதனை ஏன் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.