யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பும் வவுனியாவைச் சேர்ந்தவருடன் சேர்த்து இதுவரை 6 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 148 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டவர்களில் ஒருவருக்கே இதுவரை தொற்று அறியப்பட்டுள்ளதுடன் தற்போது சந்தேகத்தில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைவிட, வைத்தியசாலைக்கு வெளியே 569 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 20 பேருக்கு (முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் உட்பட) தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேரில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 15 பேர் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை