31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது! – பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு …

“இலங்கையில் இதுவரை 31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளன. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன.”

– இவ்வாறு பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தற்போது செயற்பாட்டு மட்டத்தில் உள்ள 4  கொரோனா கொத்தணி பரவல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 14 பேர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்,  ஜா எல – சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு  போதைப்பொருள் பாவனை நபரால்,  கிராண்பாஸ் – நாகலகம் வீதி,  குணசிங்கபுர மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளுக்குக் கொரோனா வைரஸ் பரவி இருந்தது எனவும், அப்பகுதிகளில் கொரோனா பரவியமையானது ஒரு கொத்தணி பரவல் சம்பவமாகக் கண்டறியப்பட்டது எனவும் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உண்மையில் இந்தப் போதைப்பொருள் பாவனை தொற்றாளர்களால்  கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் மக்கள் செறிந்து வாழும்  குடியிருப்புத் தொகுதிகள், தோட்டங்கள் அபாயங்களை எதிர்நோக்குகின்றன. அதனால் யாரென்று அறியாத ஒருவர், உங்கள்  குடியிருப்புத் தொகுதியிலோ, தோட்டப் பகுதியிலோ உள்நுழைந்தால், அல்லது தங்கி இருந்தால் , அது குறித்து அருகே உள்ள பொலிஸ் நிலையத்துக்கு,  சுகாதார அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அவ்வாறு அப்பகுதியுடன் தொடர்பற்ற எவருக்கேனும் தங்குமிடம் வழங்கினால், அதனை வழங்கும் வீட்டு உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.