விவசாய மற்றும் ஏனைய பொருட்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஆராய்வு

விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உற்பத்திகளை விநியோகிப்போருக்கு இடையிலான பொறிமுறைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

விவசாயம், உள்நாட்டு வர்த்தகம், நுகர்வோர் நலன்பேணல், பெருந்தோட்ட, ஏற்றுமதித்துறை அமைச்சிக்களின் செயலாளர்கள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று(வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வர்த்தகம், ஏற்றுமதி, உரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குதல், மொத்த விநியோகஸ்தர்கள், மொத்த கொள்வனவாளர்கள், பொருட்களை சேகரிப்போர், ஹோட்டல்கள் போன்ற பாரிய கொள்வனவாளர்கள் முதல் அன்றாட நுகர்வோர் வரையிலான விவசாய பயிர்களின் விற்பனைக்கு டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்த கூடிய வாய்ப்பு குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விவசாய அறுவடைகளுக்கு அதிக விலையை பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலகுவான, எளிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி எந்த ஒருவரும் டிஜிடல் பரிமாற்றத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன் இறுதி விளைவாக விவசாய பயிர்களில் தன்னிறைவடைந்த இலங்கையை உருவாக்குவதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளை தொழிநுட்பத்தின் மூலம் இணைத்து விவசாயிகளையும் கொள்வனவாளர்களையும் இலகுவாக தொடர்புபடுத்துவதற்கும் டிஜிடல் தொழிநுட்பத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் இடைத்தரகர்களிடமிருந்து கிடைக்கும் தொகையை பார்க்கிலும் அதிக விலையை விவசாயிக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் நுகர்வோர் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கும் இந்த முறைமையை பயன்படுத்திக்கொள்ள முடியும். மத்திய போக்குவரத்து சபை, புகையிரத மற்றும் தபால் திணைக்களங்களையும் டிஜிடல் தொழிநுட்ப நெறிப்படுத்தல் போக்குவரவத்து செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.