தொழிலாளர் தினத்தன்று கொரோனாவிற்கு எதிராகப் போராடும் அனைவரையும் கௌரவிக்க வேண்டும் – பிரதமர்!

உலக தொழிலாளர் தினத்தன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வேலை செய்யும் மக்கள் கௌரவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழு உலகிலுமுள்ள வேலை செய்யும் மக்கள் இம்முறை கொரோனா தொற்றுநோய்க்கு முகங்கொடுத்த நிலையிலேயே உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே எமது தேசிய சமய வைபவங்களைப் போன்றே சர்வதேச தொழிலாளர் தினத்தையும் வழமையான செயற்பாடுகள் இன்றி கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது.

தொழிலாளர் மக்களின் பலம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் எதுவுமில்லாத நிலையிலும் எமது பலத்தினையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை எமக்கு உள்ளது.

அது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்பட்டு, தொற்றினை ஒழிப்பதற்காகப் போராடுவோருக்கு வேலை செய்யும் மக்களின் துணிச்சலையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகும்.

கொரோனா தொற்றுநோய் வேலை செய்யும் மக்களின் எதிர்காலத்தில் பாதிப்புச் செலுத்தும் என்பதை மறைக்க முடியாது. இன்று போன்றதொரு தினத்தில் அந்த சவால்கள் தொடர்பாக வேலை செய்யும் மக்களை விழிப்புணர்வூட்டுவது அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உதவியாக அமையும்.

எமது வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளில் இயங்கும் தொழிற்துறை சார்ந்த ஊழியர்கள், சுற்றுலாக் கைத்தொழில் போன்ற கைத்தொழில்களில் ஈடுபடுவோர் என அனைவரும் கொரோனா தொற்றுநோயின் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துறைகளில் பணியாற்றும் இலட்சக்கணக்கான வேலை செய்யும் மக்களின் இருப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுகிறது.

இது வரை காலமும் உலகம் அங்கீகரித்த திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆற்றலை கொரோனா தொற்று கேள்விக்குட்படுத்தி வருகிறது. அத்துடன் கொரோனா தொற்றுநோய் இலங்கை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற பாடத்தைக் எமக்கு கற்பித்து வருகிறது.

எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கான உளப்பலத்துடனேயே இச்சந்தர்ப்பத்தில் நாம் செயற்படுகிறோம். ஒரு மாத காலத்திற்கு மேலாக நாட்டின் பிரதான நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களைத் தட்டுப்பாடின்றி பேணிச் செல்கிறோம்.

15 இலட்சத்திற்கு மேற்பட்ட அரச சேவை ஊழியர்களுக்கான சம்பளத்தினைத் தொடர்ச்சியாக வழங்குவதுடன், நாளாந்த தொழில்களை மேற்கொள்ள முடியாத எழுபத்தி நான்கு இலட்சம் பேருக்கு வாழ்வாதார நிவாரணம் வழங்கி வருகிறோம்.

அத்துடன், இந்த கடினமான சூழ்நிலையில் வேலை செய்யும் மக்களுடன் தொடர்புபடும் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான வரிச் சலுகைகளையும் வழங்கியுள்ளோம்.

வேலை செய்யும் மக்களின் பலத்தினை ஒன்றிணைத்த, உலகின் கொடூரமான தீவிரவாதத்துடன் போராடி வெற்றி பெற்ற நாம் இவ்வாறான பிரச்சினைகளின் போது மண்டியிட மாட்டோம். கடந்த காலத்தின் மீது குற்றஞ் சுமத்தியவாறு புலம்பிக் கொண்டிருக்கும் பழக்கமும் எம்மிடம் இல்லை.

உருவாகும் நிலைமைக்குத் தீர்வாக தனித்துவமான பொருளாதாரக் கொள்கையொன்றைக் கட்டியெழுப்பி தன்னிறைவான பொருளாதாரமொன்று தொடர்பாக அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது.

இதுவே கொரோனா தொற்றுநோய் மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். நாம் அன்று முதல் அரச துறைக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளைப் பாதுகாத்து, உள்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கொள்கையினைக் கொண்டுள்ளோம். கொரோனா தொற்றுநோய் காரணமாக அந்தக் கருத்து மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்டமை எமக்குப் பாரிய துணிச்சலை வழங்குகிறது.

எனவே, இந்த உலக தொழிலாளர் தினத்தன்று கொரோனா தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுகின்ற சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், அரச அதிகாரிகள் உட்பட அனைத்துத் துறைகளையும் வேலை செய்யும் மக்கள் கௌரவிக்க வேண்டும்.

நாம் இவ்வாறான சவால்களைத் துணிச்சலுடனேயே ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு வேலை செய்யும் மக்களுடன் இணைந்து வேலை செய்து, பெற்றுக்கொண்ட உந்துசக்தி எம்மிடம் உள்ளது. உங்கள் அனைவருக்கும் சௌபாக்கியமான, திடவுறுதி மிகுந்த எதிர்காலம் அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.