அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க உறுதியேற்போம்- செல்வம் மே தின வாழ்த்து!

தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க தொழிலாளர் தினமான இந்நாளில் உறுதியெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தமக்குரிய உரிமைகளுக்காகப் போராடி தங்கள் உரிமைகளை வென்ற நாள் மேதினம்.

உலங்கெங்கும் வாழும் உழைக்கும் மக்களுக்கான ஒரே தினம் மே தினமாக அமைகிறது. உழைக்கும் மக்களின் உயரிய தியாகங்களாலேயே இவ்வுலகு இயங்கிக்கொண்டிருக்கின்றது.

தற்போதைய பேரிடர் காலப்பகுதியிலே மக்களுக்கான அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் உழைப்பாளர்களே தன்னலம் கருதாது மக்களுக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்!

இந்தக் கொரோனாக் காலப்பகுதி நம் அனைவருக்கும் ஒரு பெரும் நெருக்கடியான சூழலினை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து உழைக்கும் மக்களாகிய நாங்கள் நிச்சயம் மீண்டுவருவோம்.

மேலும், வரலாற்றின் பக்கங்களில் தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள். தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பாதுகாக்கவும் இந்த மே தின நாளில் உறுதி ஏற்போம்.

உலகின் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.