வவுனியா, பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பரிசோதனை!

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த 9 பேரிடமும் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (வியாழக்கிழமை) மாலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 150இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் பேருந்துகளின் மூலம் நேற்றுமுன்தினம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என 9 பேரும் பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்