கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த வருடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பாரிய ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தோம். இதுகுறித்து இன்னும் சரியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொரோனா அனர்த்த காலத்தில் அக்கறையுடன் செயற்படும் அரசாங்கம் வடக்கு பிரதேச செயலக விடயத்திலும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த வாரத்தில் இராணுவ வீரர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்குவந்த கட்டத்தில் சிலர் கேவலமாக நன்றி அறியாதவர்களாக பேசிவருவது வேதனையான விடயம்.

அதேபோன்று, இராணுவ வீரர்கள் மட்டுமல்லாது வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் தமது உயிரைப் பார்க்காமல் எமது நாட்டில் வாழும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென போராடும் நிலையில் இந்தத் துறையினர் குறித்து இழிவான வார்த்தைகளைப் பேசவேண்டாம்!

நோய்த்தொற்று வேண்டுமென்று ஒருவர் பரப்புவது அல்ல. உலகளாவிய ரீதியிலான வைரஸ் தாக்கத்தையும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முப்படைகள் வைத்தியர்கள் அயராது பாடு படுகின்றனர்.

அவர்களுக்கு இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஒத்துழைப்புத் தருவதன் மூலம் மாத்திரமே இந்த ஊரடங்குச் சட்டத்தை நீக்கி சுமூகமான சூழ்நிலைக்கு நாம் மீண்டு வரமுடியும்.

அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்தியாவசிய சேவையை அரசாங்கம் வீடு வீடாகச் சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.