வடமராட்சி கிழக்கில் பொலிஸ், அதிரடிப்படை கொலை வெறியாட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத்திடல் அம்மன் கோயிலடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் மற்றும் கொட்டன்களுடன் இன்று காலை புகுந்த பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் அந்த வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 போ் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் செல்லப் பின்னடித்துள்ளனர்.

மாளிகைத்திடல் அம்மன் கோயிலடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று நுழைந்த பொலிஸாா், “கள்ள மண் ஏற்றியுள்ளீர்கள். இங்கு இருக்கின்ற கன்ரைனர் வாகனத்தை எடுத்து செல்லப் போகின்றோம்” என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை எனவும், வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கின்றதா எனப் பாா்க்குமாறும் வீட்டிலிருந்த இளைஞா்கள் கூறியுள்ளனர்.

எனினும், விடாப்பிடியாகப் பொலிஸாா் வாகனத்தைத் தாம் எடுத்துச் செல்லபோகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸாாின் அத்துமீறலை அங்கு நின்றவர்கள் அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனா். இதனையடுத்து அலைபேசியைப் பறித்துவைத்த பொலிஸாா், “கஞ்சாவை உங்கள் உடைமைக்குள் வைத்து வழக்குப் போட்டு சிறைக்குள் தள்ளுவோம்” என்று மிரட்டியுள்ளனர். எனினும், அங்கு திரண்ட மக்கள் அலைபேசியை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கடும் வாக்குவாதத்தில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர். இறுதியில் அலைபேசியிலுள்ள வீடியோ வெளியே போகக்கூடாது என்று அச்சுறுத்திவிட்டு அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இந்தநிலையில், இன்று காலை அதே வீட்டுக்கு துப்பாக்கிகள், கொட்டன்களுடன் அதிரடிப்படையினரையும் அழைத்துக்கொண்டு பொலிஸார் சென்றுள்ளனர். அந்த வீட்டிலும், அயல் வீடுகளிலும் நின்ற பெண்கள், ஆண்கள், சிறுவா்கள், வயோதிபா்கள் என அனைவா் மீதும் மிருகத்தனமாக அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

பெண் ஒருவரைக் காலால் மிதித்து அவா் மயங்கி விழும்வரை அடித்துள்ளனா். இந்தநிலையில் அவசர நோயாளர் காவு வாகனத்தை அங்கு அழைத்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த 3 பேரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் செல்லப் பின்னடித்துள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்