ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 இளைஞர்கள் – சி.ஐ.டியினரிடம் சிக்கினர்

களுத்துறைப் பகுதியில் ஒரு கிலோ கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றை அவதானித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து 700 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதை அடுத்து காரில் பயணித்த இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மடவல பகுதியில் சந்தேகநபர்கள் வாடகைக்குத் தங்கிவந்த வீட்டிலிருந்த 300 கிராம் ஹெரொயினும், 9 மில்லி மீற்றர் ரக உள்நாட்டு ரிவோல்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை , பண்டாரகம மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதியைச் சேர்ந்த 21,27,29 ஆகிய வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.