வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம்- அங்கு சிறிது பதற்ற நிலை!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு குடத்தனை மாளிகைத் திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாளிகைத் திடல் கிராமத்தில் வீடொன்றுக்கு நேற்று சென்றிருந்த பொலிஸார், கன்ரர் வாகனம் ஒன்றின் உரிமையாளர் தொடர்பாக விசாரித்ததாக அந்த வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் உரிமையாளரை கொண்டுவர முடியாது எனவும் உரிமையாளரை ஏன் அழைத்துவர வேண்டும் என்றும் தற்போதைய கன்ரர் வாகன பாவனையாளர் பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு குறித்த கன்ரர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக யாரோ அறிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதற்குப் பதிலளித்த வாகனப் பயன்பாட்டாளர், ‘சேர் நீங்கள் எங்கள் வாகன எஞ்சின் சூடாக உள்ளதா என்று தொட்டுப் பாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸார் வாகன பாவனையாளருடன் பேசுவதை அங்கிருந்த சிறுவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அந்த கைத்தொலைபேசியை பறித்து எடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தொலைபேசியை திரும்ப ஒப்படைக்குமாறு உரிமையாளரால் கேட்கப்பட்டபோதும் பொலிசார் கொடுக்க மறுத்த நிலையில் உறவினர்கள் ஒன்றுகூடி பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் தொலைபேசியை ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் குறித்த கிராமத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தொலைபேசியில் படம் எடுத்த சிறுவன் உட்பட அங்கிருந்த சிலரை தாக்கியுள்ளதாகவும் காயமடைந்த மூவர் அம்பியூலக்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையிலும் பொலிஸாருக்குப் பயந்து வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ள நிலையில் தற்போது மாளிகை திடல் கிராமத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.